Saturday, September 22, 2012

காரணப் பெயர்: 'கிஸ்-ஜிஞ்சர்'வியட்னாமில் போர் நின்று விட்டது. (அப்படித்தான் சொல்கிறார்கள்!)

மத்தியக் கிழக்கில், இஸ்ரேலும் எகிப்தும் முதல் தடவையாக வாயினால் பேசிக்கொள்ள இசைந்து விட்டார்கள்.

மாசே துங் அமெரிக்காவைப் பார்க்கும் பார்வையில் கடுகடுப்பு குறைந்து விட்டது.

பிரஷ்னேவும், நிக்சனும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகை புரிந்து கொள்கிறார்கள்.

இதற்கெல்லாம் காரணமாக விளங்கும் ஒரு நபர் தனது செயல்களின் விளைவுகளைக் குறித்துப் பெருமிதம் கொள்ள நேரம் இல்லாமல் தனது அடுத்த  முயற்சியில் ஈடுபடத் துவங்கி விமானத்தில் பறந்து கொண்டிருக்கிறார்! அவர்தான் டாக்டர் ஹென்றி கிஸிஞ்சர் - அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் சிற்பி!

இவருக்கு நோபல் பரிசு கிடைத்தது ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாகி விட்டது. இவரது செயல்பாடுகள் பெரும்பாலும் ரகசியமாகவே இருப்பதால், உலகத் தலைவர்களும், அமெரிக்க மக்களும் இவரைச் சந்தேகக் கண் கொண்டே பார்க்கின்றனர்.

இவர் ஒரு சிறந்த டாக்டர் என்பதில் சந்தேகம் இல்லை. நீண்டகால நோயாளியான வியட்னாமைக்   குணப்படுத்த இவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் சாதகமான பலன்களைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. நோய் இன்னும் முழுமையாகக் குணமடையவில்லை என்றாலும்,
இவருடைய சிகிச்சையினால் நோயின் தீவிரம் பெருமளவுக்குக் குறைந்திருக்கிறது.

இவரிடம் ஒரு அலாதியான கவர்ச்சி இருப்பதை யாராலும் மறக்க முடியாது. (இவர் பேச்சைக் கேட்டுப் பலர் மனம் மாறுகிறார்களே! என்னைப் போன்றவர்கள் பேசினால், அதைக் கேட்பதற்கே ஆள் இருப்பதில்லை!) இந்தக் கவர்ச்சி, முத்தத்துக்கு இருக்கும் கவர்ச்சியைப் போன்றது என்பதால்தான் இவர் பெயரின் முதல் பகுதி 'Kiss'  என்று அமைந்திருக்கிறது போலும்!

1967 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த நிலைக்கு இஸ்ரேல் போனால் அன்றி அந்த நாட்டுடன் பேச்சு வார்த்தைக்கே இடமில்லை என்று சொல்லிக் கொண்டிருந்த எகிப்து அதிபர் அன்வர் சதத் கிஸிஞ்சருடன் இரண்டு மணி நேரம் பேசியதும் (அதாவது கிஸிஞ்சர் இவரிடம் பேசிய பின்!),  தனது நிபந்தனையை மறந்து (அல்லது கை விட்டு), இஸ்ரேலுடன் பேச்சு வார்த்தை நடத்தச் சம்மதித்து விட்டார்.

வட வியட்னாமின் துறைமுகங்களை அமெரிக்கா  ஆழ்குண்டுகளால் (sea mines) முற்றுகையிட்டு ரஷ்யாவின் கோபத்துக்கு ஆளாகியிருந்த நிலையிலும், ரஷ்ய அதிபர் பிரஷ்னேவ், அனைவரும் எதிர்பார்த்ததற்கு மாறாகத் தனது அமெரிக்கப் பயணத்தை ரத்து செய்யாமல் அமெரிக்காவுக்கு வருகை தந்தார் என்றால், இந்தச் சாதனையை நிகழ்த்திய ராஜதந்திரத்தின் காப்பிரைட் கிஸிஞ்சருக்குத்தான் சொந்தம்.

முத்தத்தைப் போல் மயக்கத்தான் தெரியும் என்பதில்லை, இஞ்சியைப் போல் காரவும் தெரியும் இவருக்கு! ஒரு உதாரணம்: அரபு-இஸ்ரேல் போரைத் தூண்டியது ரஷ்யாதான் என்று இவர் ரஷ்யாவைக் கடுஞ் சொற்களால் தாக்கியது. ஆனாலும், உடனேயே ரஷ்யாவுக்குப் பறந்து, தனது இஸ்ரேல்-அரபு சமாதான முயற்சிக்கு ரஷ்யாவின் ஆதரவப் பெற்று வந்து விட்டார் இந்தச் சாணக்கியர்!

அரபு நாடுகளுக்கு ஆதரவான நிலையை மேற்கொண்டதற்காக அமெரிக்காவின் நேடோ நண்பர்களிடமும், நட்பு நாடான ஜப்பனிடமும் தனது காரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் கிஸ்ஜிஞ்சர்!

ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரையில் எப்போதுமே ஜிஞ்சராகத்தான் இருந்து வந்திருக்கிறார் இவர். பங்களாதேஷ் பிரச்னையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் இவர் எடுத்த நிலை தவறாகப்போய் அமெரிக்காவுக்கும் அதிபர் நிக்சனுக்கும் அவப்பெயரை ஏற்படுத்திய பிறகு, இவர் நிலை இஞ்சி தின்ற குரங்கின் நிலையாக ஆகி விட்டதுதான் பரிதாபம்!

ரஷ்யாவுடனும், சைனாவுடனும் உறவாடிக்கொண்டே, இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே சந்தேகப்போரை மூட்டி விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் இவர்.

ஜான்சன் காலத்தில் உலக நாடுகளிடையே மிகவும் தாழ்ந்திருந்த அமெரிக்கவின் செல்வாக்கை உயர்த்தி உலகளவில் மீண்டும் அமெரிக்காவுக்கு ஒரு வலுவான இடத்தை உருவாக்கியதில் இவர் பங்கு அதிகம்.

அமெரிக்க அதிபர் நிக்சனுக்குப் பலவிதங்களில் உதவியிருக்கிறார் இவர். ஒரு விஷயத்தில் மட்டும் இவரால் உதவ முடியவில்லை.

அதுதான் வாட்டர்கேட்.

No comments:

Post a Comment