Thursday, March 19, 2015

ஆசிரியருக்கு ஒரு கடிதம்

கல்கி பத்திரிகையில் வாசகர் கடிதங்களை வட்டமேஜை என்ற  தலைப்பில் வெளியிடுவார்கள். 1-06-75 கல்கி இதழில் வெளியான தலையங்கம் குறித்து   30-05-75 தேதியிட்டு நான் அனுப்பிய கடிதம் இது. (1-06-75 (ஞாயிறு) தேதியிட்ட கல்கி இதழ் 29-05-75 வியாழன் அன்றே கடைகளில் விற்பனைக்கு வந்திருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டால் என் கடிதம் எழுதப்பட்ட தேதி பத்திரிகையின் தேதிக்கு முந்தியதாக எப்படி இருந்திருக்க முடியும் என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்!) இந்தக் கடிதம் கல்கி பத்திரிகையில் வெளியாகவில்லை. மத்திய அரசின் இந்தித் திணிப்பும், தமிழக மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் மெத்தனமும் இன்று வரை அப்படியேதான் இருக்கின்றன!

வட்டமேஜை
அன்புள்ள ஆசிரியருக்கு,
1-06-75 தேதியிட்ட 'கல்கி'யின் தலையங்கம் தமிழக மக்களால் பெரிதும் அசட்டை செய்யப்பட்டு வரும் மத்திய அரசின் அபாயகரமான இந்தித் திணிப்பைப் பொது மக்களின் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது. தமிழக அரசியலின் மும்மூர்த்திகளையும் குறிப்பிட்டு, இந்த விஷயத்தில் அவர்கள் அலட்சியமாக இருப்பதைச் சுட்டிக்காட்டித் தாங்கள் வருந்தியிருக்கிறீர்கள். ஆனால் இந்த விஷயத்தில் அவர்கள் ஆக்கபூர்வமாகச் செயல்படுவார்கள் என்று நம்புவதற்கு இடமிருப்பதாகத் தெரியவில்லை.

இந்தித் திணிப்பை, தமிழகத்தைத் தவிர மற்ற தென் மாநிலங்கள் அநேகமாக அப்படியே முழுமையாக ஏற்றுக்கொண்டு விட்டதாகத் தோன்றுகிறது. எனவே இந்தி ஆதிக்கத்துக்கான எதிர்ப்பு தமிழகத்தில்தான் உருவாக வேண்டும்.

நேருவின் காலத்தில் தயக்கத்துடனும், சாஸ்திரியின் காலத்தில் அலட்சியத்துடனும் நடைபெற்ற இந்தித் திணிப்பு, இந்திரா காந்தியின் ஆட்சியில் அதிகார மமதையுடன் நம்மீது திணிக்கப்படுகிறது. வெறும் கண்டனங்களினாலோ, வாதங்களினாலோ மத்திய அரசை நிதானப்படுத்த இயலாது. இந்தித் திணிப்பின் வேகத்தையாவது அவர்கள் குறைக்க வேண்டுமென்றால், அதற்கு ஜெ.பி இயக்கத்தைப்போன்ற ஒரு பிரம்மாண்டமான இயக்கம் தேவை.

அத்தகைய இயக்கத்தைத் தமிழ்நாட்டில் முன்னின்று நடத்தும் சக்தி படைத்த மூன்று தலைவர்களின் நிலை எப்படி இருக்கிறது?

அகில இந்திய அரசியலில் தாம் வகிக்கப்போகும் பங்கைப்பற்றி இன்னமும் ஒரு நிச்சயமான முடிவுக்கு வராத காமராஜ் இதைச் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. சிறிது காலத்துக்கு முன்பு இந்தித் திணிப்புக்கு எதிராகக் குரலெழுப்பியவர் இப்போது மௌனியாகி விட்டார்.

எம் ஜி ஆரைப் பொறுத்தவரை, அவர் இந்திரா காங்கிரஸின்  உறவை நாடிக் காத்திருக்கும் இந்தச் சமயத்தில் தமிழக மக்களின் உரிமைக்குரல் இவர் தொண்டையிலிருந்து எப்படி எழும்பும்?

1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு கொண்டவரும், 1967ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காமராஜைத் தோற்கடித்தவருமான பெ.சீனிவாசன், அ.தி.மு.கவுக்குத் தாவிய பிறகு, "தமிழக மக்கள் இந்தி கற்றுக்கொள்வதை தவிர வேறு வழியில்லை" என்று சட்டமன்றத்தில் திருவாய் மலர்ந்தருளினார். இந்தி எதிர்ப்பில் அ.தி.மு.கவின் நிலை என்ன என்று புரிந்து கொள்வதற்கு இந்தப் பேச்சே சான்று!

இனி வரும் காலங்களில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தக்கூடிய ஒரே கட்சி தி.மு.க.தான். வரும் சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்து எதிர்க்கட்சி வரிசையில் அமரும் நிலை ஏற்பட்டால் தி.மு.க. இதைச் செய்ய நிச்சயம் வாய்ப்பு உண்டு. அதுவரை?

சில ஆண்டுகளுக்குமுன் நாடாளுமன்றத்தில்  இந்தித் திணிப்பை எதிர்த்து ஒரு மசோதாவைத் தி.மு.க எம்.பி.க்கள் தாக்கல் செய்தனர். ஆனால் வாக்கெடுப்பின்போது , 25 தி.மு.க. எம்.பி.க்களில் மூன்று பேர் மட்டுமே சபையில் இருந்தனர்! இந்தி எதிர்ப்பில் தி.மு.கவுக்கு இருக்கும் அக்கறை இவ்வளவுதான்!

மாணவர்களுக்கு இப்போது இந்தி எதிர்ப்பில் ஆர்வம் இல்லை. ஒரு மொழியைக் கற்றுக்கொள்வது வேறு, ஒரு மொழி திணிக்கப்படுவதை எதிர்ப்பது வேறு என்பதை இவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

இந்தி கற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற இவர்களது விரக்தி மனப்பான்மையைப் பயன்படுத்திக்கொண்டு, 'தமிழக மக்கள் இந்தியை ஏற்றுக்கொண்டு விட்டார்கள்' என்று ஆக்கிரமப்பாளர்களும் அவர்களுக்குத் துணை போகிறவர்களும் கூக்குரலிடுகிறார்கள்.

முன்பு உதட்டளிவில் இந்தித் திணிப்பை எதிர்த்துக்கொன்டிருந்த சி.சுப்பிரமணியம் போன்ற காங்கிரஸ்கரர்கள், இப்போது தங்கள் ஒப்பனையைக்  கலைத்து விட்டு, 'தமிழர்கள் இந்தி கற்றுக்கொண்டுதான் தீர வேண்டும்' என்று கட்டளையிடத் துவங்கி விட்டார்கள்.

தமிழ்நாட்டில் சில இந்திப்படங்கள் வெற்றிகரமாக ஓடுவதைச் சுட்டிக்காட்டி, தமிழர்கள் இந்தியை ஏற்றுக்கொண்டு விட்டதாகச் சிலர் வாதம் புரிகிறார்கள். நல்லவேளை! சில தமிழ்ப்படங்கள் சரியாக ஓடவில்லை என்பதைக் காரணம் காட்டித் தமிழர்கள் தமிழை எதிர்க்கிறர்கள் என்று சொல்லாமல் போனார்களே!

இந்தி ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு இன்று அறிஞர்களிடமிருந்துதான் வெளிப்பட வேண்டும் என்ற சூழ்நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் உலகத் தெலுங்கு மாநாட்டுல் பேசிய சென்னைப் பல்கலைக் கழகத்தின் இந்தித் துறைத் தலைவர் பேராசிரியர் சங்கரராமராஜு அவர்கள் இந்தியாவில் அதிகமான மக்கள் பேசுவது தெலுங்குதானே தவிர இந்தி அல்ல என்று கூறியுள்ளார். இந்தக் கருத்தை மறுத்துக் கூறுமாறு இவர் விட்ட அறைகூவலை இதுவரை யாரும் ஏற்றதாகத் தெரியவில்லை.  'இலக்கியச் சிந்தனை' கூட்டம் ஒன்றில் பேசும்போது, 'துளசி ராமாயணம் எழுதப்பட்டது இந்தியில் அல்ல, 'அவதி' என்ற மொழியில் என்றும் இவர் குறிப்பிட்டார்.

இவரைப்போன்ற அறிஞர்கள் தங்கள் கருத்துக்களைத் துணிந்து கூறி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் இந்தித் திணிப்பை எதிர்க்க இன்றுள்ள ஒரே வழி என்று தோன்றுகிறது. இவ்வாறு குரல் கொடுப்பவர்கள் எல்லாம், 'ஃபாஸிஸ்டுகள்,' 'சி.ஐ.ஏ. ஏஜண்டுகள்,' 'தேச ஒற்றுமையைச் சீர்குலைக்கும் சக்திகள்' என்றெல்லாம் இந்திரா காந்தியாலும் அவரது சீடர்களாலும் வசைபாடப் படுவதை ஏற்றுக்கொள்ள இவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

அடிப்படை உரிமைகள் பற்றிய வழக்கில் உச்ச நீதி மன்றத்தில் வாதிட்டபோது, 'தங்கள் அடிப்படை உரிமைகள் பறிபோவதைக் கண்டு மக்கள் கொதித்தெழாமல் இருப்பதற்குக் காரணம் அவர்கள் உறக்கநிலையில் (lethargy) இருப்பதுதான்' என்று பல்கிவாலா குறிப்பிட்டார்.

இந்தி ஆக்கிரமிப்பைப் பொறுத்தமட்டில், இந்தி பேசாதாரின் நலன்கள் பலியாவதை உணராமல், தென்னிந்திய மக்கள் உறக்கநிலையில்தான் இருக்கிறார்கள். இந்த உறக்கநிலையிலிருந்து அவர்கள் (நாம்) விழித்தெழாவிட்டால், ஆக்கிரமிப்பு வெள்ளத்தில் தங்கள் உரிமைகளும், நலன்களும் அடித்துச் செல்லப்படுவதை தடுக்க வகையின்றிக் கையைப் பிசைந்துகொன்டு நிற்க வேண்டிய நிலைதான் ஏற்படும்.

Thursday, March 5, 2015

அகில பாரத நாடகம்

பொதுவாக அகில பாரத நாடகம் என்ற பெயரில் ஒலிபரப்பப்படும் நாடகங்கள் குறைவான பாத்திரங்களையும், நிறைய உரையாடல்களையும், அதை விட அதிகமான அளவில் பெருமூச்சுக்களையும், விம்மல்களையும், போனால் போகட்டும் என்று கடுகளவு கதைக்கருவையும் கொண்டிருக்கும். ஆனால் இந்த மாதம் ஒலிபரப்பபட்ட 'ஒரு கீதத்தின் மரணம்' என்ற நாடகத்தைப் பற்றி அவ்வளவு அலட்சியமாகச் சொல்லி விடுவதற்கில்லை.

ஒரு மகாராஜாவால் வளர்க்கப்பட்டு வரும் ட்யூக் என்ற நாய்க்கும், ஜாலி என்ற மானுக்கும் இடையே ஏற்படும் காதலைப் பின்னணியாக வைத்து அழகாகத் தீட்டப்பட்டிருக்கும் பிரசித்தி பெற்ற ஒரியா எழுத்தாளரின் கதையின் அழகு, நாடகமாக்கப்பட்ட விதத்தில் சிதையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஜாலியின் மரணத்துக்கான சூழ்நிலையை உருவாகியிருப்பதில் சோகமும், பரிதாபமும் இழையோடினாலும், விருந்துபசாரத்தில் மகாராஜா அத்தனை தீவிரமாக இருக்க வேண்டுமா? மானைக் கொல்வதில்லை என்று தன் மகளுக்கு வாக்களித்திருப்பதைச் சொல்லியிருக்கலாமே! கோளாறு நாடக ஆக்கத்தில்தான் இருக்க வேண்டும்.

இது போன்ற நாடகங்களை ஒலிபரப்புவதன் மூலம்  மற்ற மொழி இலக்கியங்களை நாம் அறிந்து கொள்ள உதவும் அகில இந்திய வானொலியின் பணி மேலும் சிறக்கட்டும்.

Saturday, September 22, 2012

துணுக்குத் தோரணம்


எக்காலத்துக்கும் பொருந்தும் செய்திகள்

ரங்களிலிருந்து உதிரும் இலைகள் உரமாகப் பயன்படுத்தப்படாமல் எரிக்கப்படுவதன் மூலம், ஏராளமான இயற்கைச் செல்வம் வீணாகிறது.  மரங்களுக்கு அருகில் குழிகள் வெட்டி, அவற்றில் இலைகளைப் புதைத்து வைத்தால், தோட்டங்களுக்குத் தேவையான உரம் கிடைக்குமே! இதனால் ரசாயன உரங்களின் பயன்பாடு குறைவதுடன், தோட்டங்களைப் பராமரிப்பதற்கான செலவும் குறையும்.
 - 'March of the Nation' 8-12-1973 இதழில் வெளியான ஒரு வாசகர் கடிதம்.


எட்டுக்குள் அடங்கும் இவர் உலகம்!
கலிஃபோர்னியா மாநிலத்தில் பெட்ரோல் பங்க் ஒன்றில் பணியாற்றி வந்த ஸ்டான் கில்பர்ட் என்பவருக்கு எட்டாவது மாதம் (ஆகஸ்ட்), எட்டாம் தேதியன்று எட்டாவது பேரன் பிறந்தான். குழந்தையின் எடை 8 பவுண்ட் 8 அவுன்ஸ்!  தன்னுடைய அதிர்ஷ்ட எண்ணைச் சோதிப்பதற்காக அவர் 8ஆவது ரேசில் 8ஆம் எண் குதிரை மீது 8 டாலர் பந்தயம் கட்டினார். 'இன்றும் நாளையும்' என்ற அந்தக் குதிரை எட்டாவதாக வராமல் முதலில் வந்து அவருக்கு 80 டாலர் 80 சென்ட் பரிசு பெற்றுத் தந்தது!

ஃபிரான்ஸில் ஒரு பல்கலைக் கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் நூலகத்தையே திருடிக் கொண்டு போய் விட்டார்களம். கோடை விடுமுறையின்போது ஒரு சனிக்கிழமையன்று 30,000 புத்தகங்களைப் பல லாரிகளில் திருடிக்கொண்டு போயிருக்கிறார்கள்!


காரணப் பெயர்: 'கிஸ்-ஜிஞ்சர்'வியட்னாமில் போர் நின்று விட்டது. (அப்படித்தான் சொல்கிறார்கள்!)

மத்தியக் கிழக்கில், இஸ்ரேலும் எகிப்தும் முதல் தடவையாக வாயினால் பேசிக்கொள்ள இசைந்து விட்டார்கள்.

மாசே துங் அமெரிக்காவைப் பார்க்கும் பார்வையில் கடுகடுப்பு குறைந்து விட்டது.

பிரஷ்னேவும், நிக்சனும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகை புரிந்து கொள்கிறார்கள்.

இதற்கெல்லாம் காரணமாக விளங்கும் ஒரு நபர் தனது செயல்களின் விளைவுகளைக் குறித்துப் பெருமிதம் கொள்ள நேரம் இல்லாமல் தனது அடுத்த  முயற்சியில் ஈடுபடத் துவங்கி விமானத்தில் பறந்து கொண்டிருக்கிறார்! அவர்தான் டாக்டர் ஹென்றி கிஸிஞ்சர் - அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் சிற்பி!

இவருக்கு நோபல் பரிசு கிடைத்தது ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாகி விட்டது. இவரது செயல்பாடுகள் பெரும்பாலும் ரகசியமாகவே இருப்பதால், உலகத் தலைவர்களும், அமெரிக்க மக்களும் இவரைச் சந்தேகக் கண் கொண்டே பார்க்கின்றனர்.

இவர் ஒரு சிறந்த டாக்டர் என்பதில் சந்தேகம் இல்லை. நீண்டகால நோயாளியான வியட்னாமைக்   குணப்படுத்த இவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் சாதகமான பலன்களைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. நோய் இன்னும் முழுமையாகக் குணமடையவில்லை என்றாலும்,
இவருடைய சிகிச்சையினால் நோயின் தீவிரம் பெருமளவுக்குக் குறைந்திருக்கிறது.

இவரிடம் ஒரு அலாதியான கவர்ச்சி இருப்பதை யாராலும் மறக்க முடியாது. (இவர் பேச்சைக் கேட்டுப் பலர் மனம் மாறுகிறார்களே! என்னைப் போன்றவர்கள் பேசினால், அதைக் கேட்பதற்கே ஆள் இருப்பதில்லை!) இந்தக் கவர்ச்சி, முத்தத்துக்கு இருக்கும் கவர்ச்சியைப் போன்றது என்பதால்தான் இவர் பெயரின் முதல் பகுதி 'Kiss'  என்று அமைந்திருக்கிறது போலும்!

1967 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த நிலைக்கு இஸ்ரேல் போனால் அன்றி அந்த நாட்டுடன் பேச்சு வார்த்தைக்கே இடமில்லை என்று சொல்லிக் கொண்டிருந்த எகிப்து அதிபர் அன்வர் சதத் கிஸிஞ்சருடன் இரண்டு மணி நேரம் பேசியதும் (அதாவது கிஸிஞ்சர் இவரிடம் பேசிய பின்!),  தனது நிபந்தனையை மறந்து (அல்லது கை விட்டு), இஸ்ரேலுடன் பேச்சு வார்த்தை நடத்தச் சம்மதித்து விட்டார்.

வட வியட்னாமின் துறைமுகங்களை அமெரிக்கா  ஆழ்குண்டுகளால் (sea mines) முற்றுகையிட்டு ரஷ்யாவின் கோபத்துக்கு ஆளாகியிருந்த நிலையிலும், ரஷ்ய அதிபர் பிரஷ்னேவ், அனைவரும் எதிர்பார்த்ததற்கு மாறாகத் தனது அமெரிக்கப் பயணத்தை ரத்து செய்யாமல் அமெரிக்காவுக்கு வருகை தந்தார் என்றால், இந்தச் சாதனையை நிகழ்த்திய ராஜதந்திரத்தின் காப்பிரைட் கிஸிஞ்சருக்குத்தான் சொந்தம்.

முத்தத்தைப் போல் மயக்கத்தான் தெரியும் என்பதில்லை, இஞ்சியைப் போல் காரவும் தெரியும் இவருக்கு! ஒரு உதாரணம்: அரபு-இஸ்ரேல் போரைத் தூண்டியது ரஷ்யாதான் என்று இவர் ரஷ்யாவைக் கடுஞ் சொற்களால் தாக்கியது. ஆனாலும், உடனேயே ரஷ்யாவுக்குப் பறந்து, தனது இஸ்ரேல்-அரபு சமாதான முயற்சிக்கு ரஷ்யாவின் ஆதரவப் பெற்று வந்து விட்டார் இந்தச் சாணக்கியர்!

அரபு நாடுகளுக்கு ஆதரவான நிலையை மேற்கொண்டதற்காக அமெரிக்காவின் நேடோ நண்பர்களிடமும், நட்பு நாடான ஜப்பனிடமும் தனது காரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் கிஸ்ஜிஞ்சர்!

ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரையில் எப்போதுமே ஜிஞ்சராகத்தான் இருந்து வந்திருக்கிறார் இவர். பங்களாதேஷ் பிரச்னையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் இவர் எடுத்த நிலை தவறாகப்போய் அமெரிக்காவுக்கும் அதிபர் நிக்சனுக்கும் அவப்பெயரை ஏற்படுத்திய பிறகு, இவர் நிலை இஞ்சி தின்ற குரங்கின் நிலையாக ஆகி விட்டதுதான் பரிதாபம்!

ரஷ்யாவுடனும், சைனாவுடனும் உறவாடிக்கொண்டே, இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே சந்தேகப்போரை மூட்டி விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் இவர்.

ஜான்சன் காலத்தில் உலக நாடுகளிடையே மிகவும் தாழ்ந்திருந்த அமெரிக்கவின் செல்வாக்கை உயர்த்தி உலகளவில் மீண்டும் அமெரிக்காவுக்கு ஒரு வலுவான இடத்தை உருவாக்கியதில் இவர் பங்கு அதிகம்.

அமெரிக்க அதிபர் நிக்சனுக்குப் பலவிதங்களில் உதவியிருக்கிறார் இவர். ஒரு விஷயத்தில் மட்டும் இவரால் உதவ முடியவில்லை.

அதுதான் வாட்டர்கேட்.